அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, சட்டவிரோதமாக மண் அள்ள அனுமதி கொடுத்து 28 கோடி ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக 2012 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கானது எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி மனு அளித்த நிலையில், விடுவிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டது.
அந்த ஆவணங்கள் தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தமிழகத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி ஆஜர் ஆனார். இந்நிலையில் செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கௌதம சிகாமணி ஆகியோரின் 14.21 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியுள்ளனர்.