அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1996 முதல் 2001 திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அந்தச் சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக இவர் 1.36 கோடி சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் மீது லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2002இல் வழக்குப்பதிவு செய்தது.
முதலில் இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் அது வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதையும் படியுங்கள் : கனமழை பாதிப்பு – தூத்துக்குடியில் 2வது நாளாக மீட்பு பணியில் கனிமொழி எம்பி.!
இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அமைச்சர் பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இருவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த வழக்கை தானாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன் நடைபெற்றது.
இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்வதாக இன்று (டிச.19) சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார்.
அதில், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணை டிசம்பர் 21 காலை 10:30க்கு தள்ளிவைப்பதாக தெரிவித்தார். மேலும், அன்றைய தினம் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராக நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.