குவைத் சென்றார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன்சிங் - படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்!
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், படுகாயமடைந்தவர்களை மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 42 பேர் இந்தியர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மாங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்கு அனுப்ப வலியுறுத்தப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்த்தன் சிங் இன்று குவைத் சென்ற பிறகு நிலைமையை மதிப்பாய்வு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த இந்தியர்களின் உடல்களைக் கொண்டுவர இந்திய விமானப் படை விமானம் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை குவைத் அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை செய்து வருகிறார்கள். உயிரிழந்த இந்தியர்களின் உடல்களைக் கொண்டு வர இந்திய விமானப்படை விமானம் தயார் நிலையில் உள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில், 42 பேர் இந்தியர்கள் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், மற்றவர்கள் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் நேபாள நாடுகளைச் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளனர்.
இதனிடையே, குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், படுகாயமடைந்தவர்களை மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.