தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மருத்துவர் சங்கத்தினர் போராட்டம்! அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆலோசனை!
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அவர்களுடன் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமைனையில், புற்றுநோய் மருத்துவராக பணியாற்றி வரும் பாலாஜி என்பவரை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் காய்கறி வெட்டும் கத்தியால் சரமாரியாக தாக்கினார். தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்பதால் தாக்கியதாகவும் அவர் கூச்சலிட்டார்.
இந்த தாக்குதலில் மருத்துவர் பாலாஜி அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்கு அனுமதித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். உடல் நலம் குறித்து கேட்டறிந்து வெளியே வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தை மறித்து, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தொடர்ந்து இந்த சம்பவத்தை கண்டித்து, சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், மருத்துவர் சங்கம் சார்பில் மருத்துவமனைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாளையும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக மருத்துவர் சங்கத்தினருடன் தலைமை செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இக்கூட்டத்தில் கல்வி இயக்குநர் சங்குமணி, துறையின் செயலாளர் சுப்ரியா சாகு, சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.