“டாஸ்மாக்கில் தரம் இல்லை என்பதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார்” - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
டாஸ்மாக் மதுபானத்தில் தரம் இல்லை என்பதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார் என அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“கள்ளச்சாராயத்திற்கு 69 உயிர்களை இழந்துள்ளோம். கிக் இல்லை என அமைச்சர் சட்டசபையில் மிகமிக மோசமான கருத்தை பதிவு செய்வது கண்டனத்திற்குரியது. கள்ளச்சாராயம் வரக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் நடத்தி வரும் நிலையில், ஒட்டுமொத்த மக்களையும் குடிகாரர்களாக மாற்றியதுதான் இந்த அரசு. டாஸ்மாக்கில் தரம் இல்லை என்பதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. எதை நோக்கி தமிழகம் செல்கிறது?
கஞ்சா மட்டும் அழிவு கிடையாது. சிந்தட்டிக் போதைப்பொருள்களும் அதிகளவு புழங்குகிறது. தமிழக மக்கள் நல்ல ஆட்சி எது, நல்ல தலைவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கழிவுநீர் கலந்த குடிநீரால் சென்னையில் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் லஞ்சம் கேட்டது ஆட்சியின் அவல நிலையை குறிக்கிறது.கள்ளுக்கடை திறப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
ரூ.40,000 ஆயிரம் கோடி டார்கெட் வைத்து டாஸ்மாக் விற்பனை செய்து வருகின்றனர். அடுத்தாண்டு ரூ.50,000 கோடி அதற்கு அடுத்தாண்டு ரூ.60,000 கோடி என மக்களின் உயிரில் இந்த ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது வீட்டின் வெளியே குடும்பத்துடன் டாஸ்மாக்குக்கு எதிராக ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
நீட் தேர்வு வேண்டாம் என முதலில் இருந்தே சொல்லி வருகிறோம். இதை வைத்து அரசியல் தான் செய்து வருகின்றனர். மாணவர்கள், பெற்றோர்களை குழப்பி வருகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் தான் சட்டசபை நடக்கிறது. மக்கள் பிரச்னையை பேச தான் சட்டசபை. அடுத்த தேர்தலை நோக்கி தான் ஆட்சியாளர்கள் உள்ளனர். அடுத்த தலைமுறையினருக்கு, தமிழக எதிர்காலத்திற்கு என்ன விட்டு செல்கின்றனர் என கேள்வி கேட்கிறேன்” என தெரிவித்தார்.