"எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம்" - விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் #Duraimurugan!
நடிகர் ரஜினிகாந்த் பேச்சு குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்” என்ற நூலை நேற்று முன்தினம் ( ஆகஸ்ட் 24ம் தேதி ) சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்வில் முதல் நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் அந்நூலை பெற்றுக் கொண்டார். மேலும் இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது :
“நான் ஆச்சரியப்படுகிற விஷயம், ஒரு பள்ளி ஆசிரியருக்கு புதிய மாணவர்களால் எந்த பிரச்னையும் இல்லை. பழைய மாணவர்களைத்தான் சமாளிக்க முடியாது. இந்தப் பழையவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வகுப்பைவிட்டு செல்லாமல் இருப்பவர்கள். இங்கும் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கின்றனர். அதிலும், துரை முருகன் என ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர். இவர்களையெல்லாம் வைத்து கலைஞர் எப்படித்தான் சமாளித்தாரோ. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உங்களுக்கு என் வாழ்த்துகள்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைக்கேட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அரங்கத்தினர் அனைவரும் சிரித்தனர். இதனிடையே காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 119 ஆவது பிறந்த நாள் விழாவில் நேற்று பங்கேற்ற அமைச்சர் துரைமுருகனிடம் ரஜினிகாந்த் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
இதையும் படியுங்கள் : வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 6 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் #MKStalin!
அதற்கு பதிலளித்த துரைமுருகன் கூறியதாவது :
“மூத்த நடிகர்களெல்லாம் வயதாகி போய், பல் விழுந்து, தாடி வளா்த்து, சாகிற நிலையில் நடிப்பதால் தான் இளைஞா்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை மறந்துவிட்டு ஏதோ பேசுகிறார் ரஜினிகாந்த்” இவ்வாறு துரைமுருகன் பதிலளித்தார்.
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியது தொடர்பாக ரஜினியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு, “துரைமுருகன் நீண்டகால நண்பர்.அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. நட்பு எப்போதும் தொடரும்” என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் துரைமுருகன் “எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.