கர்நாடகாவில் சுரங்கத்துறை பெண் அதிகாரி கொலையில் திடீர் திருப்பம்: முன்னாள் ஓட்டுநர் கைது!
கர்நாடகாவில் பெண் அதிகாரி படுகொலை வழக்கில் அவரது முன்னாள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் சுரங்கம் மற்றும் புவியியல் துறை இணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் பிரதிமா. இவர் பெங்களூரில் சுப்பிரமணியபுராவில் குடும்பத்தினருடன் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இவருடைய கார் ஓட்டுநர் பிரதிமாவை பணி முடிந்து வீட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளார். அப்போது பிரதிமா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் அவரது சகோதரர் பிரதிமாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் பிரதிமா தொலைபேசி அழைப்பை ஏற்காமல் இருந்துள்ளார்.
இதனால் அவரது சகோதரர் மறுநாள் காலை பிரதிமாவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பிரதிமா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் பிரதிமாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் பிரதிமாவின் முன்னாள் கார் ஓட்டுநராக இருந்த கிரண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பிரதிமாவின் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த கிரண், புகார் ஒன்றில் அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கிரண், பெண் அதிகாரி பிரதிமாவை கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட கிரணிடம் முதற்கட்ட விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி அடுத்தகட்ட விசாரணைக்காகக் காவலில் வைக்க தயாராகி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.