For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மினி பஸ் திட்டம் 2024 | வரைவு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு!

09:47 AM Jun 28, 2024 IST | Web Editor
மினி பஸ் திட்டம் 2024    வரைவு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு
Advertisement

தனியாா் மினி பேருந்துகள் 25 கி.மீ. தொலைவு இயக்கும் திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் 1997ம் ஆண்டு கிராமப்புறங்களுக்கு பேருந்து சேவை வழங்கும் வகையில் மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த மினி பஸ்கள், 16 கி.மீ. வரை சேவையில்லாத வழித்தடத்திலும், 4 கி.மீ. முக்கிய சாலைகளில் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் 1999ம் ஆண்டு மினி பஸ் சேவையில் சிறிய மாற்றத்தை திமுக அரசு கொண்டு வந்தது.

அதன்படி கிராமப்பகுதிகளில் 20 கிலோமீட்டர் தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டது. மேலும் அரசு பேருந்து சேவை உள்ள மார்க்கங்களில் 4 கிலோமீட்டர் வரை மினி பஸ்களை இயக்கவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காலத்தில் மினி பஸ் சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு காரணங்களால் மினி பஸ்கள் சேவையும் குறைந்தே காணப்பட்டது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மினி பஸ்கள் சேவையை கிராமப்புறங்களிலும், வேகமாக வளர்ந்து வரும் புறநகர் பகுதிகளிலும் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மோட்டார் வாகன சட்டப்படி புதிய விரிவான மினி பஸ் திட்டம், 2024 வரைவு அறிக்கையை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

வரைவு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மினி பஸ்கள் சேவை அதிகபட்சம் 25 கி.மீ தூரம் வரை இயக்கப்படும். அதில் 17 கி.மீ. பேருந்து சேவைகள் இல்லாத வழித்தடத்திலும், 8 கி.மீ. ஏற்கனவே பேருந்து சேவை இருக்கும் வழித்தடத்திலும், அதாவது 70க்கு 30 என்ற விகிதத்தில் இயக்கப்படும்.

மொத்தமாக பேருந்துகள் இயக்கப்படும் தூரத்தில் 70 சதவீதம் பேருந்து சேவை இல்லாத வழித்தடத்திலும், சேவைகள் உள்ள வழித்தடத்தில் 30 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது. சென்னை மாநகராட்சியில் உள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 7 மண்டலங்களை தவிர தமிழகம் முழுவதும் இந்த மினி பஸ்கள் இயக்கப்படும்.

சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகள் சேவைகள் வழங்கப்படாத பகுதிகளாக கருதப்பட்டு அங்கே மினி பஸ் சேவை வழங்கப்படும். மினி பேருந்தின் முனையப் புள்ளியிலிருந்து அடுத்த ஒரு கிலோமீட்டருக்குள் ஏதேனும் அருகிலுள்ள பகுதிகள் மருத்துவமனை, கல்வி நிறுவனம், ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையத்திற்குச் சற்று முன்பு இருந்தால், வட்டார போக்குவரத்து அலுவலர் சேவை இருக்கும் பகுதியில் கூடுதல் 1 கி.மீ. தூரத்தை அனுமதிக்கலாம்.

அனைத்து மினி பஸ்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் ஜூலை 14ம் தேதிக்குள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். மேலும் ஜூலை 22ம் தேதி இதுகுறித்து உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 2018ல் புதிய மினி பஸ் விரிவாக்க திட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இதையடுத்து புதிய திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement