கிருஷ்ணகிரி அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பெண்கள் உட்பட 22 பேர் காயம்!
கிருஷ்ணகிரி அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 13 பெண்கள் உட்பட 22 பேர் காயமடைந்தனர்.
சென்னை அம்பத்தூரிலிந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் இன்று
விடியற்காலை மினி பேருந்தில், தருமபுரி மாவட்டம் ஒக்கேனக்கல் அருவிக்கு
சுற்றுலா சென்றனர். இந்த மினி பேருந்தை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த கரீமுல்லா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதனிடையே ஓட்டுநர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சென்ற போது வண்டியை, தாறுமாறாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் ஓட்டுநருக்கு தேநீர் வாங்கி கொடுத்து அவரை தூங்கச் சொல்லி உள்ளனர். ஆனால் ஓட்டுநர் அதற்கு மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து பேருந்தை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி முன்பு வந்த போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மைய தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் பயணித்த ஓட்டுநர் உட்பட அனைவரும் காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த 16 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.