மிக்ஜாம் புயல் எதிரொலி | வெள்ளப்பெருக்கால் துண்டிக்கப்பட்ட கிராமம்!
350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் ஒரு கிராமமே வெள்ள பெருக்கால் துண்டிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜாம் என பெயரிடப்பட்ட இந்த புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மிக்ஜம் புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நிலைகொண்டிருந்தது.
மேலும் இப்புயலானது தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பாபட்லா பகுதியில் தீவிர புயலாக நேற்று மாலை கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியது.
இந்த நிலையில், வெள்ள பெருக்கால் ஒரு கிராமமே துண்டிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவிலை அடுத்த வடகால் கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்தது.
இதனால் இங்கு உள்ள நீர் நிலைகள் நிரம்பி உபநீர் வெளியேறுகிறது. இங்கு உள்ள ஓடையில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் தீவு போல் காட்சி அளிக்கிறது. வடகால் கிராமத்தில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் பணிக்கு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் படகு ஒன்று ஏற்பாடு செய்து.
அதன் மூலம் கிராமத்தில் இருந்து செட்டி புண்ணியம் பகுதிக்கு வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த பகுதியில் மழை நீர் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிப்பதால் பொதுமக்கள் வெளியேறுவது கடினமான சூழல் உள்ளது. இங்கு உள்ள கிராம மக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை அங்குள்ள மலை அருகே நிறுத்திவிட்டு படகுமூலம் ஊருக்கு செல்கின்றனர். மீண்டும் ஊரிலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் வருவதற்கு படகில் வந்து தங்கள் இரு சக்கர வாகனத்தை எடுத்து செல்கின்றனர்.