மிக்ஜாம் நிவாரணம் ₹.6000 - சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை வரும் 17-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் டோக்கன்கள் விநியோகம் சில பகுதிகளில் தொடங்கியது.
முன்னதாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரணம் ரூ.6000 வழங்கப்படுவது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் உள்ள குடும்பங்களுக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும். திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களில் பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரணம் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 வட்டங்களில் நிவாரண தொகை வழங்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூரில் 3 வருவாய் கிராமங்களிலும் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்களை இழந்த குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கும் முறையை பின்பற்றி ரூ.6,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழை வெள்ளத்தால் மத்திய மாநில அரசு மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தால், பாதிப்பு விவரங்களை தங்கள் பகுதிக்குரிய நியாய விலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அதன் அடிப்படையில், அவர்களுக்கும் உரிய நிவாரணம் அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹6,000 நிவாரணம் வழங்கும் பணியை வரும் 17-ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.