நடுவானில் பரபரப்பு... இண்டிகோ விமானத்தில் பீடி புகைத்த நபர்... நடந்தது என்ன?
இண்டிகோ விமானத்தில் பீடி புகைத்ததற்காக பயணி ஒருவர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று (மார்ச் 5) டெல்லியிலிருந்து மும்பை சென்ற விமானத்தின் கழிவறைக்குள் 42 வயது பயணி ஒருவர் பீடி புகைத்ததாக கூறப்படுகிறது. பீடியின் கடுமையான புகை வாசனையானது பணியாளர்களிடையே சந்தேகத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பயணிகள் இண்டிகோ விமான ஊழியர்களிடம் உடனடியாக புகார் அளித்தனர்.
அப்போது, கழிவறைக்குள் பயணி ஒருவர் புகைபிடித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, விமான ஊழியர்கள் புகைபிடித்த பயணியை தடுத்து நிறுத்தினர். பின்னர் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அந்த நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனது செயலை ஒப்புக் கொண்டார்.
இதன் விளைவாக அவர் மீது ஐபிசி மற்றும் விமானச் சட்டம் பிரிவு 336 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த நபர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் விமானம் தரையிறங்கியதும் மும்பையின் சஹாரா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து, சஹார் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 336 இன் கீழ் மற்றவர்களின் உயிருக்கு அல்லது பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காகவும், விமான விதிகளின் பிரிவு 25ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மார்ச் 2023 இல், இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த மற்றொரு பயணி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கேபின் குழுவினர் குப்பைத் தொட்டியில் ஒரு சிகரெட்டைக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நபர் மீதும், சக பயணிகளின் உயிருக்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.