OpenAI நிர்வாக குழு பொறுப்பிலிருந்து மைக்ரோசாப்ட் விலகல்!
செயற்கை தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐயின் நிர்வாக குழுவில் பார்வையாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
சாட்ஜிபிடி உள்ளிட்ட வலிமையான செயற்கை தொழில்நுட்ப தளங்களை ஓபன்ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், ஓபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் பார்வையாளராக மைக்ரோசாப்ட் இணைக்கப்பட்டது. இந்த சூழலில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து விலகியுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மைக்ரோசாப்ட் வெளியிட்ட அறிக்கையில், ஓபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவில் தாங்கள் வகித்த பார்வையாளர் (அப்சர்வர்) என்கிற பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
செய்யறிவு நிறுவனத்தின் தலைமையும் நிர்வாக குழுவும் தங்களின் இந்த முடிவுக்கு ஆதரவளித்ததை பாராட்டியுள்ள மைக்ரோசாப்ட், கடந்த 8 மாதங்களாக புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாக குழுவின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும் நிறுவனம் செல்லும் பாதையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தங்களின் வரையறுக்கப்பட்ட பார்வையாளர் என்கிற பொறுப்புக்கு இனி அவசியமில்லை எனவும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனின் நம்பிக்கையில்லா விசாரணைக்கு மத்தியில் இந்த விலகல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் 13 பில்லியன் அமெரிக்க டாலர் ஓபன்ஏஐ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. நிர்வாக குழு மற்றும் நிறுவனத்தின் போக்கு குறித்து நம்பிக்கை கொண்டுள்ளதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது ஓபன்ஏஐ.