மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம் - டாக்கா விமான நிலையத்தில் 106 தமிழக மாணவர்கள் சிக்கி தவிப்பு!
மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டதால், 106 தமிழக மாணவர்கள் வங்கதேசத்தின் டாக்கா விமான நிலையத்திலேயே தங்கியுள்ளனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் தீடிரென இயங்காததால் உலகம் முழுவதும் பல துறைகளில் அசாதாரண சூழல் நிலவியது. விமான நிலையங்கள், ஐடி நிறுவனங்கள் என பல இடங்களில் கணினிகள் திடீரென இயங்காததால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் இயங்காத நிலையில் உலகம் முழுவதும் சுமார் 1300 விமான சேவைகள் முடங்கியுள்ளன. இந்தியா முழுவதும் 170 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து 90 சதவீத விமானங்கள் இயக்கப்படவில்லை. சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய 15 விமானங்கள் தாமதமாக வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் இருந்து புறப்பட இருந்த 40க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக கிளம்புகின்றன. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவையிலிருந்து கிளம்பும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
56 மாணவர்கள் டாக்காவில் இருந்து நேரடியாக சென்னைக்கும், 50 மாணவர்கள் கொல்கத்தா வழியாக சென்னைக்கு வரவும் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக, விமான சேவை பாதிக்கப்பட்டதால் 106 மாணவர்களும் டாக்கா விமான நிலையத்திலேயே தங்கியுள்ளனர்.