இந்தியர்கள் பயன்படுத்தும் உப்பு, சர்க்கரையில் #MicroPlastic - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
அறிவியலாளர்களின் சமீபத்திய அறிக்கையின் படி, ஒவ்வொரு இந்தியரும் தனது உணவில் சேர்க்கும் உப்பு மற்றும் சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக்கள் கலந்துள்ளதாகவும், இதனால் அவற்றை உட்கொள்வதை குறைக்குமாறும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த தசாப்தத்தின் முக்கிய பிரச்னையாக மாறிக் கொண்டு இருக்கும் ஒன்று 'மைக்ரோ பிளாஸ்டிக்' (Microplastic). கண்ணுக்குத் தெரியாத அளவு நுண்ணிய அளவில் இருக்கும் பிளாஸ்டிக் மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படுகிறது. இது உலகில் இருக்கும் அனைத்து பொருட்களிலும் கலந்துள்ளது. கடல் நீரில் தொடங்கி பிறக்காத சிசுவின் உடலுக்குள் கூட இந்த மைக்ரோ பிளாஸ்டிக்கள் ஊடுருவியுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்திய ஆராய்ச்சிகளில் மனிதனின் நுரையீரல், இதயம், ஏன் தாய்ப்பாலில் கூட மைக்ரோ பிளாஸ்டிக்கள் கலந்து இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மைக்ரோ பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு மட்டும் கேடு விளைவிக்காமல் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைக்கும் ஒன்றாக மாறி வருகிறது. இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் நாம் தினசரி உண்ணும் உணவில் குறிப்பாக உப்பு மற்றும் சர்க்கரையில் எவ்வளவு ஊடுருவி இருக்கிறது என்று ஒரு ஆராய்ச்சியின் மூலம் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சராசரி இந்தியனும் தினசரி 10.98 கிராம் அளவு உப்பு மற்றும் 10 ஸ்பூன் சர்க்கரை பயன்படுத்துவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அப்படி நாம் சாப்பிடும் உப்பு மற்றும் சர்க்கரையில் மைக்கோ பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக இந்த புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனமான 'டாக்சிஸ் லிங்க்' என்ற அமைப்பு சமீபத்தில் 'உப்பு மற்றும் சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக்' என்ற தலைப்பின் கீழ் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.
அந்த ஆய்வில் இந்தியாவில் ஆன்லைன் மற்றும் கடைகளில் விற்கப்படும் 10 வகையான உப்பு மற்றும் 5 வகையான சர்க்கரைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வில் அளவில் சிறியவை, பெரியவை, பைபர், துகள்கள் என்று பல்வேறு அளவுகளில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பது தெரியவந்தது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக்கின் அளவு 0.1 மிமீ முதல் 5 மிமீ வரை இருந்துள்ளது கண்டறியப்பட்டது.
உப்பில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக்களின் அளவை ஆராயும்போது அயோடின் கலந்த உப்பில் அதிகப்படியான மைக்ரோ பிளாஸ்டிக் நார் வடிவங்களில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். 1 கிலோ உலர்ந்த உப்பின் எடையில் சுமார் 6.71 முதல் 89.15 மைக்ரோ பிளாஸ்டிக் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அயோடைஸ்ட் தூள் உப்பில் 89.15 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களும் கல் உப்பில் மிகக் குறைந்த அளவான 6.70 மைக்ரோ பிளாஸ்டிக் துண்டுகளும் கண்டறியபட்டன.
சர்க்கரையை பொறுத்தவரை சர்க்கரை மாதிரிகளில் ஒரு கிலோவுக்கு 11.85 முதல் 68.25 மைக்ரோ பிளாஸ்டிக் துண்டுகள் வரை கண்டறியப்பட்டன. அதேபோல், நாட்டு சர்க்கரையில் குறைவான மைக்ரோ பிளாஸ்டிக்களும், வெள்ளை சர்க்கரையில் அதிகமான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களும் கண்டறியப்பட்டன.
இந்த ஆய்வு குறித்து டாக்ஸிக்ஸ் லிங்க் நிறுவனர் ரவி அகர்வால் குறிப்பிடும்போது "மைக்கோ பிளாஸ்டிக்குகளின் ஆய்வு முடிவுகள் அவற்றால் ஏற்படும் அபாயங்களை குறைக்ககூடிய முயற்சிகளை நோக்கி ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாக கொண்டது. எங்கள் ஆய்வில் அனைத்து வகையான உப்பு மற்றும் சர்க்கரை மாதிரிகளிலும் கணிசமான அளவு மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதை கண்டறிந்துள்ளோம். இந்த ஆராய்ச்சி மனித ஆரோக்கியத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்களில் நீண்ட கால பாதிப்பு பற்றிய அவசர மற்றும் விரிவான ஆராய்ச்சிக்கு அழைப்பு விடுக்கிறது" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் இதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. டாக்ஸிக்ஸ் லிங்க் ஆய்வில், ஒவ்வொரு இந்திய உப்பு மற்றும் சர்க்கரை பிராண்டிலும், தொகுக்கப்பட்ட மற்றும் தொகுக்கப்படாத, மைக்ரோபிளாஸ்டிக்களால் மாசுபட்டுள்ளது. மைக்ரோபிளாஸ்டிக்ஸின் நீண்டகால வெளிப்பாடு இருதய நோய்கள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர். உணவுப் பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸை குறைப்பதன் அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.