அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜம் புயலாக வலுவடைந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, வரும் 4-ம் தேதி காலைக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் ; செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!
அதோடு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.