மிக்ஜாம் புயல் - மீட்பு பணிகளுக்காக விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!
மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விரைந்துள்ளனர்.
மேலும், அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புயல் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகியுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 250 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 குழுக்கள் பெங்களூரிலிருந்து வரவழைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.