"சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் கொண்டுவந்தது #Meiyazhagan!" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம்!
மெய்யழகன் திரைப்படம் தனது சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக கொண்டுவந்தது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன் படத்தை இயக்கினார். நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தயாரித்து இருந்தனர்.
செப்டம்பர் 27-ஆம் தேதி திரைக்கு வந்த மெய்யழகன் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 'மெய்யழகன்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் அக். 25ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி, மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : Assam-ல் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – ஒருவர் கைது!
இந்நிலையில், ஓடிடி தளத்தில் ‘மெய்யழகன்’ படத்தைப் பார்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், படக்குழுவினருக்கு தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது :
"ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம்.
எனது சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக எனக்குள் கொண்டுவந்த படம். நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் சி.பிரேம்குமார் பார்வையாளர்களை உறவுக்கூட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். Really felt good watching this feel good movie"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.