“அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதால் மேட்டூர் உபரி நீர் திட்டம் முழுமை பெறாமல் உள்ளது” - இபிஎஸ் குற்றச்சாட்டு!
“மேட்டூர் உபரி நீர் திட்டம், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டதால் இன்று வரை அந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேட்டூர் உபரி நீர் மூலம் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்த, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு விவசாயிகள் சார்பில் மேச்சேரியில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
மேட்டூர் உபரி நீர் திட்டம், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரே காரணத்திற்காக இன்று வரை அந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் இந்த திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு, துவக்கப்பட்டது. நிதியும் ஒதுக்கப்பட்டது. அதிமுக கட்சிக்காரர்களுக்கு மட்டும் தண்ணீர் கொண்டு போகவில்லை. எல்லோருக்கும் பொதுவான திட்டம்.
வேளாண் பெருமக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை. விடுபட்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம், மீண்டும் அதிமுக அரசு வந்தவுடன் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியில் ஏரிகள் நிரப்பும் திட்டம் 70% நிறைவு பெற்றிருந்தது. ஓராண்டுக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம்.
கோட்டையில் உட்கார்ந்து கோப்புகளை பார்த்தால் போதாது. விவசாயிகள் மனங்களில் என்ன உள்ளது என்பதை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் நீர் மேலாண்மை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளின் விரோத அரசாக திமுக செயல்படுகிறது. 50 ஆண்டுகால காவிரி பிரச்னை தீர்க்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். 84 ஆண்டுகள் தூர்வாரப்படாமல் இருந்த மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது
3 ஆயிரம் மெட்ரிக் டன் வண்டல் மண்ணை மேட்டூர் அணையில் இருந்து எடுத்துச் சென்றனர். தற்போது தமிழ்நாட்டில் உள்ள அணைகள் தூர்வார டெண்டர் விடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அறிவித்த கங்கை- கோதாவரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்த உடன் நிச்சயம் இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம்.
ஒவ்வொரு முறையும் கர்நாடகாவில் இருந்து வரும் உபரி நீரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் இந்த நிலை மாற வேண்டும். பொதுமக்களின் வரிப்பணத்தை விரயம் செய்து ரூ. 84 கோடியில் நடுக்கடலில் பேனா நினைவுச் சின்னம் தேவையா?. எடப்பாடி பழனிசாமி பொறாமையில் பேசுவதாக உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார். எந்த திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. எந்த திட்டத்தையும் கொண்டு வராமல் மக்களை ஏமாற்றும் அரசு இது.
அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு, கருணாநிதி பெயரை வைப்பதற்காக, என்னை பற்றி விமர்சனம் செய்யாதீர்கள். பேனா சிலைக்கு கட்சி நிதியிலிருந்து செலவு செய்யலாமே. காலில் செருப்பு கூட இல்லாமல் பலர் இருக்கும் போது, நூற்றுக்கணக்கான கோடி செலவு செய்து கார் பந்தயம் தேவையா? இதற்குதான் மக்கள் உங்களை ஆட்சியில் அமர்த்தினார்களா?
ஸ்டாலினும், உதயநிதியும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசி கொள்கிறார்கள். உழைப்பால் உயர்ந்தவன் நான்; உங்களை போல் தந்தையின், தாத்தாவின் அடையாளத்தால் பதவிக்கு வரவில்லை. உதயநிதிக்கு நா அடக்கம் தேவை. தொடந்து எங்களை விமர்சனம் செய்தால் தக்க பதிலடி கொடுப்போம்.
பொறுப்பு உணர்ந்து பணியாற்றுங்கள். சோதனைகளை கண்டு பயப்படுபவன் நான் அல்ல. மடியில் கனமில்லை மனதில் பயமில்லை. பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது திமுகதான். கொள்ளை அடித்த பணத்தை பாதுகாக்க மத்திய அரசின் துணை வேண்டும். மக்களின் தேவை அறிந்து குரல் கொடுக்கும் கட்சி அதிமுக” எனப் பேசினார்.