மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் சேவை துவக்கம்; பயணிகள் உற்சாகம்!
மண் சரிவு காரணமாக நிறுத்தபட்ட மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு பின்பு இன்று மீண்டும் துவங்கியது.
தொடரும் கனமழையால், மலை ரயில் பாதைகளில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இயக்கப்பட்டு வரும் மலை ரயிலில் உள் நாடுகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 20 ம் தேதி எற்பட்ட மண்சரிவில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மலை ரயில் பாதை அமைந்துள்ள கல்லார், ஆடர்லி, ஹில்கிரோ உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் மலை ரயில் சேவை டிச.21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மண்சரிவை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், அப்பணிகள் முடிவுற்று இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் ரயில் சேலை தொடங்கியது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 130க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு குன்னூர் சென்ற நிலையில், அதில் மிகுந்த உற்சாகத்துடன் பயணிகள் பயணித்தனர்.