7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் - இன்று முதல் அமல்..!
பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் நீட்டிப்பு 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகள் கைப்பேசியில் வாட்ஸ் ஆப், ‘பேடிஎம்’ உள்ளிட்ட செயலிகள் மூலம் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் முறையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தி வருகிறது. இது பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ‘போன் பே’ செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் புதிய வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அதிகரித்து வரும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாத மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் வரும் நவ. 27ஆம் தேதி முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என அறிவித்திருந்தது.
சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலான வழித்தடம் , விமான நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் வழித்தடம் மற்றும் சென்னை பரங்கி மலையிலிருந்து சென்ட்ரலுக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் என அனைத்து ரயில்களும் இதுவரை ஒன்பது நிமிட இடைவெளியில் இயக்கப்பட்ட நிலையில் இன்று முதல் ஏழு நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.