3000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா!
ஃபேஸ்புக், வாட்ச்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு தாய் நிறுவனமான மெட்டா தனது 5 சதவிகிதம் அதாவது 3000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த பணி நீக்க நடவடிக்கையானது இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொடங்கியுள்ளது.
இதில் பல ஊழியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பான மின்னஞ்சலை மெட்டா நிறுவனம் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் மெட்டா அலுவலகங்களில் பணி நீக்க நடவடிக்கை பிப்ரவரி 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த பணி நீக்க நடவடிக்கை ஊழியர்களின் பணித்திறன் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே தவிர இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மெட்டா வெளியிடவில்லை. மேலும் அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அதில் கைதேர்ந்த ஊழியர்களை பணியமர்த்தத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து பல ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மெட்டா நிறுவனம் எடுத்திருக்கும் இந்த முடிவு, அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளைப் பாதிக்கும் என சர்வதேச ஊடகமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.