தெலங்கானாவில் தொடங்கிய 2 நாட்களில் ‘ஆண்கள் மட்டுமே பயணிக்கும் பேருந்து’ சேவை நிறுத்தம்!
தெலங்கானாவில் Men Only சிறப்பு பேருந்து சேவைக்கு போதிய வரவேற்புக் கிடைக்காததால், தொடங்கிய 2 நாட்களில் இந்தச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்று தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. தெலுங்கானா மாநிலத்தில் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் முதற்கட்டமாக தெலங்கானா பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசு சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளில் இலவச பேருந்து பயண திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் கடந்த டிசம்பர் 9 முதல் அமலுக்கு வந்தது.
தொடர்ந்து, கட்டணமில்லாத பேருந்து பயணத்தினால் பெண்கள் அதிகளவில் பயணம் செய்வதாகவும் ஆண்களுக்கு பேருந்துகளில் இருக்கை கிடைப்பதில்லை எனவும் ஆண்கள் தரப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்ததால், ஆண்கள் மட்டுமே பயணிக்கும் புதிய பேருந்து வசதிக்கு தெலங்கானா அரசு ஆலோசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ஆண்களுக்கு என Men Only என்ற சிறப்பு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. ஆனால் இதற்குப் போதிய வரவேற்புக் கிடைக்காததால், இந்தச் சேவை தொடங்கிய 2 நாட்களில் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் படியில் தொடங்கிக் கொண்டு செல்வதைத் தவிர்ப்பதற்காக எஸ்பி நகர் முதல் இப்ராகிம்பட்டினம் வரை இந்த பேருந்து சோதனை முறையில் இயக்கப்பட்டது. ஆனால், தனி பேருந்து சேவை இருந்தாலும், குறைந்த மாணவர்களே இதைப் பயன்படுத்திதால் இச்சேவை கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.