விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம் - தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு!
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானர். அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், ரஜினி, கமல், விஜய் உட்பட பல திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடந்து, அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரது மறைவிற்கு நடிகர் சங்கம் சார்பில், வருகிற ஜன. 19-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“தன் புகழையும், திறனையும், சிந்தனையையும் மக்களுக்காக அர்ப்பணித்தவர். நடிகர் சங்கத்தின் தூணாய் விளங்கிய கேப்டன் விஜயகாந்த்தின் நினைவேந்தல் கூட்டம் ஜன.19-ம் தேதியன்று மாலை 6 மணி அளவில் சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும், நடிகர் சங்கம் சார்பில், சினிமாவின் அனைத்து சங்கங்களுக்கும் இரங்கல் கூட்டம் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலியும், மவுன அஞ்சலியும் நடப்பதுடன், விரும்பியவர்கள் அவரது நினைவலைகளையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.