#Melmalayanur அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம் - ஏராளமானோர் பங்கேற்பு!
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு பால், தயிர், பன்னீர், சந்தனம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பட்டு உடுத்தி, பல்வேறு வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு நெய்வேத்திய தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கணேச ஜனனி அலங்காரத்தில் அங்காளம்மன் அருள் பாலித்தார். அமாவாசை தினம் என்பதால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் இரவு 10.30 மணிக்கு மேல் ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அப்போது கோயில் பூசாரிகள் அங்காளம்மனை தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து தாலாட்டு பாடி நெய்வேத்தியம் தீபாராதனை காட்டினர். அப்போது அங்கு கூடியிருந்த
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் சூடம் ஏந்தி அங்காளம்மனை வழிபட்டனர்.
இவ்விழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன.