வெகுவிமரிசையாக நடைபெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலய ஊஞ்சல் உற்சவ விழா! - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சூடம் ஏற்றியும் பக்தி பரவசத்தில் சாமி ஆடியும் அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ளது
பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலமான ஸ்ரீஅங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருட தை மாத அமாவாசை தினத்தையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பால், சந்தனம் பழரசம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு மூலவர் அங்காளம்மன் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதனையடுத்து, உற்சவர் அங்காளம்மனுக்கு பட்டு உடுத்தப்பட்டு, அலங்காரங்கள் செய்யப்பட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அங்காளம்மன் அருள் பாலித்தார். பின் நள்ளிரவு பூசாரிகள் வழக்கப்படி, உற்சவர் அங்காளம்மனை பூசாரிகள் தோளில் சுமந்து வந்து மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் மேடையில் அமர வைத்து, தாலாட்டு பாடல்கள் பாடப்பட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு
அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.