Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்...

10:30 AM Feb 17, 2024 IST | Web Editor
Advertisement

மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த கர்நாடக மாநில முதலமைச்சருக்கு,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கர்நாடக மாநில முதலமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்,  மேகதாது அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஏற்கெனவே தனியாக ஒரு திட்ட மண்டலம் மற்றும் இரண்டு துணை மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும்,  அணை கட்டப்படும்போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பினை அடையாளப்படுத்தும் பணி,  வெட்டப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை ஆகியவை ஏற்கெனவே துவங்கப்பட்டுவிட்டதாகவும்,  தேவையான அனுமதி பெற்ற பின்பு இந்தப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் துவங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிப்பதோடு, தமிழ்நாட்டின் உரிமையினை பறிக்கும் செயலாகும்.  இது கடும் கண்டனத்திற்குரியது.  காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கர்நாடகத்தில் வந்ததிலிருந்தே,  மேகதாது அணை கட்டப்படும் என்று தொடர்ந்து அம்மாநில முதலமைச்சரும்,  துணை முதலமைச்சரும் பேசி வந்த நிலையில்,  தற்போது இதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பது தமிழ்நாட்டு மக்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த நிலையில்,  கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணையை கர்நாடகா கட்டிக் கொள்ளலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் காவேரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம் நடத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
மேகதாது அணை கட்டப்படாத நிலையிலேயே, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை.

மாறாக, உபரி நீர் மட்டும்தான் தமிழ்நாட்டிற்கு வருகிறது. இந்த நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால், வருகின்ற உபரி நீரும் வந்து சேராத நிலை உருவாகும். மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

எனவே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  கர்நாடக முதலமைச்சரிடம்,  மேகதாது அணை கட்டும் திட்டத்தினை கைவிட வலியுறுத்தவும்,  தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசினை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும்,  இது குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசிடம் முறையிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ. பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
CauveryCM SiddaramaiahKarnatakaKarnataka Assemblymekedatu damOPanneerselvamOPSTN Govt
Advertisement
Next Article