For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேகதாது அணை; அனைத்து ஏற்பாடுகளும் தயார் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா...

02:10 PM Feb 16, 2024 IST | Web Editor
மேகதாது அணை  அனைத்து ஏற்பாடுகளும் தயார் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
Advertisement

காவிரியின் குறுக்கே மத்திய மேகதாது அணையை கட்டுவோம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார். 

Advertisement

கடந்த 2015-ம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.  இந்த அறிக்கைக்கு, 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.  இந்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என, தமிழ்நாடு அரசு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது.

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் விளக்கம் அளித்தது.  மேகதாதுவில் அணை கட்டி 66 டிஎம்சி தண்ணீரை தேக்கினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராது,  தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.  இதில் முதலமைச்சராக சித்தராமையாவும்,  துணை முதலமைச்சரும்,  நீர் மேலாண்மை அமைச்சருமாக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றுக் கொண்டனர்.  அதன்பிறகு மேகதாது அணை விவகாரம் மீண்டும் தமிழ்நாடு-கர்நாடக அரசியலில் சர்ச்சையாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.  இதனைதொடர்ந்து ”மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன்” என டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

மேலும்,  மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளதாக கர்நாடக அரசு குற்றம் சாட்டியது.  தமிழ்நாடு அரசு காவிரி உபரி நீரையும், ஒகேனக்கல் 2வது கூட்டு குடிநீர் திட்டத்தையும் சட்டவிரோதமாக செயல்படுத்தி வருவதாக கர்நாடக அரசு தெரிவித்தது.  மேலும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு, கர்நாடக துணை முதலமைச்சரும், நீர் மேலாண்மை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதி இருந்தார்.  அணை கட்டுவது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தின் மூலம் சிவக்குமார் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில்,  கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா மாநில பட்ஜெட்டை  இன்று தாக்கல் செய்தார். அப்போது மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் கர்நாடகாவுக்கு ரூ.59,274 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,  சஞ்சீவினி கஃபே என்ற பெயரில் பெண்களே நடத்தும் கஃபேக்கள் சுமார் ரூ.7 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.  மொத்தமாக 5 மக்கள் நலத்திட்டங்களுக்கு, ரூ. 57,000 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,  காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட சித்தராமையா,  அணை கட்ட ஒரு தனி மண்டலக் குழு,  2 துணை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக கூறினார்.  கர்நாடக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால்,  இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை வராமல், சித்தராமையாவின் நடவடிக்கைகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags :
Advertisement