“பிரதமர் #NarendraModi உடனான சந்திப்பு முக்கியமானது” - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!
பிரதமர் நரேந்திர மோடியுடனான இந்த சந்திப்பு முக்கியமானது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி போலந்தைத் தொடர்ந்து உக்ரைனுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கைகொடுத்து, ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் போர் சூழல் குறித்த புகைப்பட காட்சிகளை மோடி பார்வையிட்டார். முன்னதாக கீவ் நகரில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவிடத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “இரு நாடுகளுக்கு இடையேயான மோதல்கள் குழந்தைகளிடம் பேரழிவை ஏற்படுத்துகின்றன. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்கள் பற்றி நினைக்கிறேன். மேலும் அவர்களின் துயரத்தைத் தாங்கும் வலிமை தர இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்தியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மற்றும் உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பு முக்கியமானது” என பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று சென்றுள்ள பிரதமர் மோடி, உக்ரைன் நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் ஆவார். ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான பிரச்னையில் இந்தியா நடுநிலையாகவே இருக்கிறது. இது போருக்கான காலமல்ல, அமைதிக்கான காலம் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி, ரஷ்யா சென்று அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேசிய நிலையில் தற்போது உக்ரைன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.