பாஜக ஆட்சி அமையும்போது தமிழில் மருத்துவம், பொறியியல் : அமித்ஷா வாக்குறுதி!
இந்தி சர்ச்சை தொடர்பாக மாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
“மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்க்க உங்களுக்கு (திமுக) தைரியம் இல்லை. நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் போது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்ப்போம்.
உங்கள் ஊழலை மறைக்க மொழி அரசியலை கையில் எடுத்துள்ளீர்கள். இந்தி எந்த தேசிய மொழியுடனும் போட்டியிடவில்லை. இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு துணை மொழி. இந்தி அனைத்து இந்திய மொழிகளையும் வலுப்படுத்துகிறது, மேலும் அனைத்து இந்திய மொழிகளும் இந்தியை வலுப்படுத்துகின்றன.
மொழியின் பெயரால் நாட்டைப் பிரிப்பவர்களின் செயல்திட்டம் நிறைவேறாமல் இருக்க நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அலுவல் மொழித் துறையின் கீழ், நரேந்திர மோடி அரசு இந்திய மொழிகள் பிரிவை அமைத்துள்ளது. இது அனைத்து இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி, பெங்காலி, அனைத்து மொழிகளின் பயன்பாட்டை மேம்படுத்தும்.
டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, குடிமக்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர்களின் சொந்த மொழியில் கடிதப் போக்குவரத்து நடத்துவேன். ஊழலை மறைக்க மொழியின் பெயரால் கடை நடத்துபவர்களுக்கு இது ஒரு வலுவான பதில்.
அவர்கள் என்ன சொல்கிறார்கள்? நாங்கள் தென்னிந்திய மொழிகளை எதிர்க்கிறோம் என்று?. இது எப்படி சாத்தியமாகும்?. நான் குஜராத்தைச் சேர்ந்தவன், நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். நாங்கள் எப்படி எதிர்ப்போம்?.
மொழியின் பெயரில் விஷத்தைப் பரப்புபவர்களிடம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொழிகளை விரும்பும் நீங்கள், இந்தியாவின் மொழியை விரும்பவில்லை என்று நான் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.