For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு - கேரளா மருத்துவ கழிவுகள் விவகாரம்: ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் தடை!

11:12 AM Dec 29, 2024 IST | Web Editor
தமிழ்நாடு   கேரளா மருத்துவ கழிவுகள் விவகாரம்  ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் தடை
Advertisement

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டிய ஒப்பந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்ததுடன் 3 ஆண்டுகள் தடை விதித்து கேரள சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மருத்துவ கழிவுகளை நெல்லையில் 6 இடங்களில் கொட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மருத்துவ கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி, கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றியது.

மேலும் இது தொடர்பாக அரசுக்கு கேரள நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், அரசின் நிர்வாக தோல்வியை இது காட்டுவதாகவும் தெரிவித்தது. மேலும் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள் குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே திருவனந்தபுரம் மாநகராட்சியின் அங்கீகாரம் பெற்று ஒப்பந்தம் எடுத்துள்ள சன்ஏஜ் எகோ சிஸ்டம் என்ற நிறுவனம் தான் கேரள கழிவுகளை தமிழகத்தில் கொட்டி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்நிறுவனத்திற்கு திருவனந்தபுரம் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிருந்தது. ஆனால், அந்நிறுவனம் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை அகற்ற குத்தகை எடுத்த அந்நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்ததுடன், அந்த நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் தடை விதித்து கேரள சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டவிரோத செயல்களால் அரசுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பையும் அந்த அந்நிறுவனமே ஏற்க ஆணையிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement