கேரளாவுக்கே எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்... சமூக விரோதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்!
நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி, தீவிரமாக நடைபெற்று வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் இந்த வார தொடக்கத்தில் நெல்லையில் கேரளக் கழிவுகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டு இருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அதன்படி மருத்துவ கழிவுகளை கேரள அரசே அப்புறப்படுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து கேரளா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நெல்லையில் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன், கேரள மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதனையடுத்து இன்று நெல்லையில் கொட்டப்பட்ட கேரள கழிவுகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கேரளாவில் இருந்து வந்த 30 பேர் கொண்ட குழு தற்போது 6 குழுக்களாக பிரிந்து குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே கழிவுகளை அகற்றும் பணியை ஆய்வு செய்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது;
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல் படியும், தமிழ்நாடு அரசின் உத்தரவு படியும் கழிவுகள் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கழிவுகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு வாகனங்கள், காவல்துறை பாதுகாப்போடு கேரள மாநில எல்லை வரை அனுப்பப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனை சாவடிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள இரண்டு சோதனை சாவடிகளிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்படும். மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் சமூக விரோதிகள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.