"தமிழ் வழியில் மருத்துவக்கல்வி விரைவில் அறிமுகம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர்,
"தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி தமிழ் வழியில் போதிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று உள்ளது.
அதனை மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டில் தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் தமிழ்நாட்டிற்கு ஆறு புதிய கல்லூரிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் வந்தவுடன் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.