ஆந்திராவில் உயிரை மாய்த்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவர்!
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ரங்கராய மருத்துவக் கல்லூரியில் பயிலும் 23 வயது மாணவர், நேற்று நள்ளிரவில் தனது விடுதியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இறந்த மாணவர் ஆர்.சாய் ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சாய்ராம் தங்கியிருந்த அறையின் மற்ற மாணவர்கள், வேறொரு அறைக்கு படிக்க சென்றிருந்தபோது, அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பிறகு அறைக்கு வந்த சக மாணவர்கள் சாய் ராமின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, சாய் ராம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. மருத்துவப் படிப்புக்குப் பயிற்சி பெறும் மாணவர்களும், மருத்துவ மாணவர்களும் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.