‘Thala for a reason’ டிரெண்டுக்கு முன் நான் - ருதுராஜின் வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
இந்திய கிரிக்கெட் வீரரும், CSK அணியின் கேப்டனுமாக ருதுராஜ் கெய்க்வாட்டின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் ஆட்டமிழந்த போது தோனியின் ஜெர்சி எண்ணை அடித்து அவர் ஆட்டமிழந்தார் என்று பேசப்பட்டது.
இதனையடுத்து ஜூலை 7-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது 77 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த போது தோனியின் 43-வது பிறந்தநாளுக்கு இரண்டு 7 ரன்களை அதாவது 77 ரன்களை அடித்து, தோனிக்கு தனது பிறந்தநாள் பரிசை இரட்டிப்பாக வழங்கினார் என கூறினார்.
தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் அவர் அடித்த ரன்களை வைத்து தோனியுடன் ஒப்பிட்டு பல்வேறு சுவாரசிய கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஹராரே நகரில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது இந்திய அணி சார்பாக நான்காவது வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 49 ரன்களை குவித்து ஆட்டமிழந்திருந்தார். இதையும் 4+3=7 என கூறி வருகின்றனர்.
இவ்வாறு 7 என்ற எண் எங்கெல்லாம் வருகிறதோ, அங்கெல்லாம் தல ஃபார் எ ரீசன் என்ற ஹேஷ்டேக்கை தோனியின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ருதுராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டுள்ளார். அதில், தனக்கு வழங்கப்பட்ட தொப்பியின் எண்ணை குறிப்பிட்டு 8+8=16, 1+6 = 7 எனக் குறிப்பிட்டு, நான் டிரெண்டுக்கு முன்பாக இருக்கிறேன்” என கிண்டலாக தெரிவித்துள்ளார்.