"மதிமுக, திமுக கூட்டணியிலேயே தொடரும்" - மதிமுக பொது செயலாளர் வைகோ!
தூத்துக்குடியில், மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில், ஸ்டெர்லைட் ஆலை போராட்ட வரலாறு குறித்த பொதுக்கூட்டம் நேற்று இரவு வி.வி.டி.சிக்னல் அருகே நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், "எல்லா தரப்பினரும் புகழும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். பல மாநில முதல்வர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டங்களை பார்த்து அவற்றை பின்பற்றி வருகின்றனர். எனவே இந்த நல்லாட்சி தொடர வேண்டும்.
வருகிற 2026இல் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சி மலர அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். நான் எப்போதும் கூட்டணி தர்மத்தை மதிப்பவன். எப்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றேனோ, அன்று முதல் அதை காத்து வருகிறேன். இந்தக் கூட்டணிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன். சமீபத்தில் துரை வைகோ பிரதமர் மோடியை சந்தித்தது தொடர்பாக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. மதிமுக கூட்டணி மாறப்போகிறது. துரை வைகோ மத்திய அமைச்சர் ஆகப்போகிறார் என்றெல்லாம் கற்பனையாக எழுதுகின்றன.
ஆனால் உன்மை என்னவென்றால் உக்ரைன் - ரஷ்ய போர் நடந்து வரும் நிலையில், தமிழகக்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் ரஷ்யாவில் சிக்கியுள்ளார். அவரை பாதுகாப்பாக மீட்க கோரி அவரது பெற்றோர் துரை வைகோவிடம் கூறியுள்ளனர். அவர் மனதாபிமான அடிப்படையில் பிரதமரை சந்தித்து அந்த மருத்துவ மாணவரை காப்பாற்ற கோரியுள்ளார். மேலும் மராட்டிய மாநிலத்தில் இருந்தும் பலர் துரை வைகோவிடம் இதுபோன்று சிக்கியுள்ளவர்களை மீட்க உதவுங்கள் என கூறியுள்ளனர். அதையும் அவர் பிரதமரை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.
எங்கள் கூட்டணி திமுகவுடன்தான் தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குறித்து பேசி அவர் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை இங்கு அமைவதற்கு அனுமதி கொடுத்த நாளிலிருந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்திருக்கிறேன் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டு நடந்த சமயம் பாதிக்கப்பட்ட அனைவரின் வீட்டிற்கும் நேரிடில் நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறேன் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்து வாதாடியும் ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு காரணமாக இருந்தவன் நான் ஸ்டெர்லைட் ஆலை ஒருபொழுதும் மீண்டும் தூத்துக்குடியில் வருவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றார். இந்த கூட்டத்தில் மதிமுக மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.