தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி!
தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்த வழக்கில், 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செம்பனார்கோயில் கலைமகள் கல்வி நிலைய தாளாளர் கொடியரசு மற்றும் வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இவர்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த அகோரம், கொடியரசு ஆகியோரின் ஜாமீன் மனு இரண்டு நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வினோத் ஆகியோரின் ஜாமீன் மனுவை மயிலாடுதுறை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.