For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மயிலாடுதுறை: காவிரி துலா உற்சவம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

11:07 AM Nov 16, 2023 IST | Web Editor
மயிலாடுதுறை  காவிரி துலா உற்சவம்   ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Advertisement

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற காவிரி துலா உற்சவ தீர்த்தவாரியை முன்னிட்டு
காவிரி கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். 

Advertisement

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி
மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  மயிலாடுதுறை
காவிரி கரையில் மயூரநாதர் ஆலயம்,  காசி விஸ்வநாதர் ஆலயம்,  தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலயம்,  படித்துறை விஸ்வநாதர் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்கள் ஆகியவற்றில் ஐப்பசி மாதம் கடைசி பத்து நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கி திருத்தேர் உற்சவம், திருக்கல்யாணம்,  தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நிறைவுற்ற நிலையில்,  விழாவின் முக்கிய
நிகழ்ச்சியான காவிரி தீர்த்தவாரி இன்று மதியம் ஒன்றரை மணிக்கு நடைபெற உள்ளது.

ஆற்றின் இரு கரைகளிலும் அனைத்து ஆலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வு தேதிகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்..!

இதற்காக இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் புனித நீராட
பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.  மதியம் ஒன்றரை மணிக்கு 20ஆயிரத்துக்கும் அதிகமான
பக்தர்கள் ஒரே இடத்தில் நீராடுவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி மீனா தலைமையில் திருவாரூர்,
தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த அதிரடி படையினர் உள்ளிட்ட 300 போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாவின் போது ஏற்படும் குற்றச் செயல்களை கண்காணிக்க 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  உடைமாற்றும் அறைகள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு படையினர் ரப்பர் படகுகளில்
ஆழமான பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், காலை முதலே காவிரியின் இரு கரைகளிலும் பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர்.  தடுப்புகள் அமைத்து தனித்தனியே குளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  காவிரி ஆற்றின் இருபுறமும் உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு நடந்து செல்ல மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புனித நீராடும் பக்தர்கள் அருகில் உள்ள ஆலயங்களில் தரிசனம் செய்து திரும்பி செல்கின்றனர்.  இன்று துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
Advertisement