“ரமலான் மாதம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும்” - பிரதமர் மோடி வாழ்த்து!
ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி (சந்திர) நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும். ரமலான் நோன்பு என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக உள்ளது. கலிமா, தொழுகை, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவையே மீதமுள்ள 4 கடமைகள். பொதுவாக 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் இந்த நோன்புகளில், விடியற்காலை (ஸஹர்) முதல் சூரிய அஸ்தமனம் (இஃப்தார்) வரை முஸ்லிம்கள் சாப்பிடவோ, எதையும் குடிக்கவோ மாட்டார்கள்.
இந்த சூழலில் நாடு முழுவதும் இன்று(மார்ச்.02) முதல் ரமலான் மாதம் தொடங்கியது. இதனையொட்டி அதிகாலையிலேய இஸ்லாமியர்கள் உணவை உட்கொண்டு நோன்பை தொடங்கினர். மேலும், பள்ளிவாசல்களில் அவர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு ரமலான் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் மாதம் தொடங்கி உள்ள நிலையில், அது நம் சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். இந்த புனித மாத பிரதிபலிப்பு, நன்றியுணர்வு மற்றும் பக்தியை காட்டுகிறது. மேலும் இரக்கம், கருணை மற்றும் சேவையின் மதிப்புகளை நமக்கு நினைவூட்டுகிறது. ரமலான் முபாரக்"
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.