சென்னை - மாத்தூர் MMDA பகுதியில் ஆட்டோ கண்ணாடிகள் உடைக்கப்பட்ட விவகாரம் : முன் விரோதமே காரணம் என போலீசார் விளக்கம்!
மாத்தூர் MMDA பகுதியில் ஆட்டோ கண்ணாடிகள் உடைக்கப்பட்டதற்கு முன் விரோதமே காரணம் என போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்துக்கு உட்பட்ட MMDA மாத்தூர் 3வது பிரதான சாலை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 ஆட்டோக்களின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர்.
இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஏப். 28-ம் தேதி இரவு 11.30 மணியளவில் பெரிய மாத்தூரை சேர்ந்த அன்பு என்பவரை அதே பகுதியை சேர்ந்த முகேஷ், ஆகாஷ், வினோத், திருமால் ஆகியோர் தாக்கியுள்ளனர். அதற்கு பதில் தாக்குதல் நடத்த வந்த அன்புவின் நண்பர்களான பிரகாஷ், கிருஷ்ணா, சிவா, லாரன்ஸ் ஆகியோர் நண்பனை தாக்கிய நபர்கள் இல்லாத காரணத்தினால் சென்னை மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் அவர்கள் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோக்களின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு கஞ்சா போதை காரணம் இல்லை என்றும் இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் காரணம் என்றும் போலீசார் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து இரண்டு நபர்களை கைது செய்துள்ள போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.