இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் | கால அட்டவணை வெளியீடு
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் போட்டிகளுக்கான கால அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கடந்த சனிக்கிழமை (29.06.2024) சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது.
இந்நிலையில், இந்திய இளம் அணி ஜிம்பாபே சென்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் 2-ல் வென்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இத்தொடரில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளது. இந்நிலையில், இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3டி20 மற்றும் 3 ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த டி20 தொடர்கள் கொழும்பில் உள்ள பல்லேகலேயில் நடைபெறுகிறது.
அதன்படி, முதல் டி20 தொடர் ஜுலை 26ம் தேதியும், 2வது டி20 தொடர் ஜுலை 27ம் தேதியும், 3வது டி20 தொடர் ஜுலை 29ம் தேதியும் நடைபெறுகிறது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஆக.1,4,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் கொழும்பில் நடைபெற உள்ளது. தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.