For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மழையால் கைவிடப்பட்ட ஆட்டம் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப்க்கு தகுதி!

09:27 AM May 17, 2024 IST | Web Editor
மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்   சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப்க்கு தகுதி
Advertisement

2020-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Advertisement

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எஞ்சிய 2 இடங்களுக்கான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடம் பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.

இந்நிலையில் நேற்றூ (மே 16) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 66வது லீக் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற இருந்தது. ஆனால், ஹைதராபாத்தில் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. முதலில் இரவு 8 மணிக்கு டாஸ் போடப்பட்டு 8.15 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மீண்டும் மழை பெய்த நிலையில் 5 ஓவர்கள் கொண்ட போட்டி நடத்தப்பட இரவு 10.30 மணி தான் கட் ஆஃப் நேரமாக இருந்தது. எனினும் மழை நின்றபாடில்லை. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 66ஆவது லீக் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 15 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதோடு, 3ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றிருந்த ஹைதராபாத் தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில் பிளே ஆஃப் சுற்றுக்கு 3ஆவது அணியாக தகுதி பெற்றுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் 14 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வி மற்றும் 2 போட்டிகளுக்கு முடிவு இல்லாத நிலையில் 12 புள்ளிகளுடன் 8ஆவது இடம் பிடித்துள்ளது. இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது.

இதுவரையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 76 ஐபிஎல் போட்டிகளில் ஒரு போட்டி கூட மழையால் பாதிக்கப்படவில்லை. முதல் முறையாக குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 4 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு போட்டியிலும், குஜராத் டைட்டன்ஸ் 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

கடைசியாக நடைபெற்ற 3 போட்டியிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியுள்ளது. ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 56 போட்டிகளில் 34 போட்டியில் வெற்றியும், 21 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. தற்போது இந்த மைதானத்தில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன.

Tags :
Advertisement