மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து பயங்கர தீ விபத்து - 100க்கும் மேற்பட்டோர் காயம்!
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பூச்சோங் நகரில் அரசு
எரிசக்தி நிறுவனமான பெட்ரோனாஸ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் அமைந்துள்ள எரிவாயு குழாயில் இன்று(ஏப்ரல்.01) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, தீப்பிழம்பு உருவாகி வானுயர காட்சியளித்தது.
இந்த விபத்தில் கிட்டதட்ட 50 வீடுகளில் பலர் சிக்கி இருக்கும் நிலையில் அவர்களை மீட்கும் பணியிலும் எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீப்பிழம்பை கட்டுப்படுத்தும் பணியிலும் அங்குள்ள தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்த விபத்தில் தீக் காயங்கள், சுவாச பிரச்னை, பிற காயங்களால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த விபத்து குறித்து பெட்ரோனாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீ விபத்து ஏற்பட்டுள்ள 500 மீட்டர் நீளமுள்ள எரிவாயு குழாய்யை மூடி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இச்சம்வம் குறித்து சிலாங்கூர் மாநில முதலமைச்சர், ”பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்புத் துறை அருகிலுள்ள வீடுகளை காலி செய்ததாகவும், நிலைமை கட்டுக்குள் வரும் வரை குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள மசூதிகளில் தங்க வைக்கப்படுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.