ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிவிபத்து | உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்வு... 750 பேர் காயம்!
ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று (ஏப்.26) பிற்பகல் திடீரென மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து துறைமுகத்துக்கு அருகே உள்ள கண்டெய்னர் யார்டில் நிகழ்ந்தது. இந்த பயங்கர வெடி விபத்தின் அதிர்வலையானது பல கிலோமீட்டனர் தொலைவுக்கு அப்பாலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தினால் ஏற்பட்ட தீ மளமளவென பரவி அதிகளில் கரும்புகை கிளம்பியதாக தெரிகிறது.
உடனடியாக இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே, இந்த விபத்தில் ஏற்பட்ட தீயின் தீவிரம் தீவிரமடைந்துள்ளதாகவும், அது மேலும் பரவக்கூடும் என்றும் நேற்று (ஏப்.26) ஈரான் அரசு தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 750 ஆகவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தகவல் கிடைக்கவில்லை. இது தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.