பாகிஸ்தானின் குவெட்டாவில் பயங்கர குண்டுவெடிப்பு - 10 பேர் உயிரிழப்பு..!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பல்வேறு ஆயுதம் தாங்கிய குழுக்கள் இயங்கி வருகின்றனர். இந்த குழுக்கள் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பலுசிஸ்தானின் குவெட்டா பகுதியில் அமைந்துள்ள எல்லைப்புற பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், அருகிலுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பான குவெட்டா சிறப்பு நடவடிக்கைகளின் SSP முகமது பலோச், "மாடல் டவுனில் இருந்து எல்லைப்புற பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஹாலி சாலையை நோக்கி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் திரும்பியபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர் பக்த் முகமது கக்கரின் கூற்றுப்படி, இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் மற்றும் ஐந்து பேர் சிகிச்சையின் போது இறந்தனர். காயமடைந்த 32 பேர் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.