மாசி மாத பூஜை - சபரிமலையில் நாளை நடை திறப்பு!
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைக்காக நாளை (பிப். 13) மாலை நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு நாளை (பிப். 13) மாசி மாத பூஜைக்காக கோயில் திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து நாளை மறுநாள் (பிப். 14) காலை முதல் வரும் பிப். 18-ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
மாசி மாத பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மாலை 5 மணிக்கு நந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம் பூதிரி நடையை திறந்து வைப்பார். 18-ம் தேதி வரை 5 நாட்கள் நெய் அபிஷேகம் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் உட்பட சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
ஆன்லைன் முன்பதிவு உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வழக்கமான பூஜைகளுக்கு பிறகு வரும் 18-ம் தேதி இரவு ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோயில் நடை சாத்தப்படவுள்ளது.