மன்னிப்புக் கோரிய மார்க் ஜக்கர்பர்க்...! ஏன் தெரியுமா?
சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பிற்கான வசதிகள் தொடர்பான விசாரணையின்போது மெட்டா நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் எழுந்து நின்று மன்னிப்பு கேட்டார்.
தற்போதைய சமூகத்தினர் சமூக வலைதளங்களில் பல மணி நேரம் செலவழிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகளும் இதற்கு அடிமையாகி விடுகின்றனர். இதனால் பல்வேறு விதமான பிரச்னைகள் எழுகின்றன. இதையடுத்து, சமூக வலைதளங்களில் போதுமான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இல்லாததால் குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினர் சைபர் புல்லியிங் எனப்படும் இணைய மிரட்டல்களுக்கும், பாலியல் தொல்லைகளுக்கும், தற்கொலைகளுக்கும் கூட ஆளாகின்றனர் என அமெரிக்க செனட் அமைப்பினர் குற்றம் சாட்டினர்.
இதையும் படியுங்கள் ; “பீகாரில் 5 மணி நேரத்தில் ஆட்சி அமைந்தது... ஜார்க்கண்டில் 22 மணி நேரமாகியும் தகவல் இல்லை...” - மஹுவா மாஜி குற்றச்சாட்டு
சமூக வலைதளங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் இந்த விசாரணையில் பங்குபெற்றனர். தங்கள் குழந்தைகள் அடந்த துன்பங்களை எடுத்துரைத்தனர். இந்த வலைதளங்கள் தங்களது லாபங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கு போதுமான வசதிகளை மேம்படுத்தாததாக குற்றம் சாட்டினர்.
இது குறித்து மெட்டா நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் கூறுகையில், அங்கிருந்த குடும்பங்களிடம், 'நீங்கள் பட்ட அனைத்து கஷ்டங்களுக்கு நான் வருந்துகிறேன். மன்னித்துக்கொள்ளுங்கள். இது யாருக்கும் நடக்கக்கூடாது' என கூறினார்.
'இணையதளம் உருவானதிலிருந்து குற்றவாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். இந்த குற்றவாளிகளிடமிருந்து குழந்தைகளுக்கும், பதின் பருவத்தினருக்கும், பெற்றோருக்கும் பாதுகாப்பை அளிக்க நாங்கள் கடுமையாக உழைத்துவருகிறோம்' என மார்க் தெரிவித்தார்.
மேலும், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு அந்நியர்கள் யாரும் குறுஞ்செய்தி அனுப்ப முடியாதபடி புதிய வழிமுறைகளைக் கொண்டு வருவதாக மார்க் உறுதியளித்தார். வன்முறையைத் தூண்டும் பதிவுகள், தற்கொலை தொடர்பான பதிவுகளை இவர்கள் பார்வையிலிருந்து நீக்க முயற்சிப்பதாக கூறினார்.