#AirShow2024 | 4 மணி நேரத்திற்கு பிறகு இயல்புநிலைக்கு திரும்பிய மெரினா கடற்கரை!
சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த நிலையில், மெரினா கடற்கரை சாலையில் 4 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
இந்திய விமானப்படை கடந்த 1932ம் ஆண்டு அக்.8ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று (அக். 6) மிகப்பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
இந்த விமான சாகச கண்காட்சி, பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. அதேவேளையில் மெரினா சாகச நிகழ்ச்சி முடிந்து 2 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையாமல் இருந்தது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் புறப்பட்ட நிலையில் பல இடங்களிலும் நெரிசல் காணப்பட்டன. சென்னை அண்ணா சாலை, ஆர்.கே. சாலை, செம்மொழி பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.
இதையும் படியுங்கள் : ViralNews | இதெல்லாமா சாப்பிடுவாங்க… உத்தரபிரதேசத்தில் பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கிலோ முடி!
இதனால் மக்கள் அவதிப்பட்டனர். போதிய பேருந்து வசதிகளும், ரயில் வசதிகளும் கிடைக்காததால் பல இடங்களில் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் அவதிப்பட்டனர்.குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் குவிந்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு மெட்ரோ ரயில் 3.5 நிமிடங்கள் இடைவெளியில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் 4 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. பொதுமக்கள் அதிகளவில் இருந்த மெரினா கடற்கரை இயல்புநிலைக்கு திரும்பியது.