ஷங்கரின் பாராட்டைப் பெற்ற 'மாரீசன்' - படக்குழுவினர் உற்சாகம்!
சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் 'மாரீசன்' திரைப்படத்திற்கு, பிரபல இயக்குநர் ஷங்கர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் படத்தின் சிறப்பம்சங்களை பாராட்டி அவர் வெளியிட்ட பதிவு, திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஷங்கர் தனது பதிவில், "மாரீசன் திரைப்படம் பார்த்தேன். முதல் பாதி, கதையின் பின்னணியை மிகவும் சுவாரஸ்யமாகவும், புதுமையாகவும் விவரித்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. இரண்டாம் பாதியில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்தன. கதைக்களத்தின் வலிமைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
குறிப்பாக, நடிகர் வடிவேலுவின் நடிப்பு ஆழத்தையும், வலிமையையும் தருகிறது. அவர் உணர்ச்சிவசப்பட்டு உடைந்துபோகும் காட்சியில், 'ஆஹா... என்ன ஒரு சிறப்பான நடிப்பு!' என்று நான் வியந்துபோனேன். அதேபோல், நடிகர் ஃபகத் ஃபாஸில் தன் கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்த்து அருமையாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு முன்னணி இயக்குநரிடமிருந்து வந்த இந்தப் பாராட்டு, மாரீசன் படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது.
மேலும் படக்குழுவினர் ஷங்கரின் இந்தப் பாராட்டிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்த படம், அதன் தனித்துவமான கதைக்களம், வலுவான திரைக்கதை மற்றும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு ஆகியவற்றால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.