#Marakkanam | "இதுவரை யாரும் வரவில்லை, அரசு உதவியை எதிர்பார்க்கிறோம்" - மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை!
மரக்காணத்தில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டடுள்ள நிலையில் அரசு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (நவ.30) மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் தற்போது பெய்து வரும் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடிசை வீடுகளில் வசித்து வரும் நிலையில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிட்டதால் இரவு முழுவதும் உறங்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
https://www.facebook.com/share/v/18EQ9j1Guh
உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதியடைந்து வருவதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாகவே இந்த சூழல் நிலவுவதாகவும் யாரும் தங்களுக்கு உதவ முன்வரவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுடன் சிரமப்பட்டு வரும் சூழலில் அரசு தங்களுக்கு உதவ முன்வருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.